நெமிலி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி குடோனில் தீ விபத்து

நெமிலி அடுத்த சிறுவளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி (வயது 46). இவர் அதே பகுதியில் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த கம்பெனிக்கு சென்னை, திருபெரும்புதூர், சுங்குவாரசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனிகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து அதனை மறுசுழற்சி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 இந்நிலையில் நேற்று திடீரென குடோன் அருகே கொட்டி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் தீப்பற்றி எரிந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின்பேரில் நெமிலி சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்தத் தீவிபத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்தனர்.

தொடர்புடைய செய்தி