ஒடுகத்தூரில் தாய் மகனை வெட்டியவர் கைது

ஒடுகத்தூரை அடுத்த வண்ணந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லைமேடு அருகே உள்ள கொண்டத்தூர் கிராமத்தை சேர்ந்த நடேசன் என்பவரது மகன்கள் வெங்கடேசன், சுவாமிநாதன், ஜெயேந்திரன். நடேசன் தான் இறப்பதற்கு முன் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் விவசாய நிலத்தை 3 மகன்களுக்கும் சரிசமமாக பங்கிட்டு கொடுத்துள்ளார். இந்த நிலத்தில் 3 பேரும் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், நிலத்தில் பொது வழி இல்லாததால் அண்ணன், தம்பிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

 இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கடேசன் மகன் தியாகராஜனுக்கும், ஜெயேந்திரன் மகன் இளவரசனுக்கும் நிலம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த தியாகராஜன் மற்றும் அவரது மனைவி தீபா ஆகியோர் இளவரசனை கோடரி, கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளவரசனின் தாய் இந்திரா (60) அவர்களை தடுக்க முயன்றுள்ளார். 

ஆனால், அவருக்கும் வெட்டு விழுந்துள்ளது. இதில், இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து, இளவரசன் கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர். அவரை வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி