திருப்பத்தூர்: பள்ளி திறக்காததால் மாணவர்கள் அவதி

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், ஏ கஸ்பா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 468 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். 

இதில் பொறுப்புத் தலைமை ஆசிரியர் ஜான்சி சந்திரவதி மற்றும் மூன்று தற்காலிக ஆசிரியர்கள் என 16 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிகள் வழக்கம்போல் 8.30 மணிக்குள்ளாக திறக்கப்பட வேண்டிய நிலையில் இன்று (ஜூன் 4) 9:00 மணிக்கு மேலாகியும் பள்ளி திறக்கப்படாததால் மாணவர்கள் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக வெளியில் காத்திருக்கக் கூடிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து அரை மணி நேரத்திற்குப் பின் வந்த ஒரே ஒரு ஆசிரியர் எத்திராஜ் என்பவர் மட்டும் பள்ளியைத் திறந்ததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் 9.45 மணிக்குள்ளாக ஓரிரு ஆசிரியர்கள் மட்டுமே வந்ததாகவும் கூறப்படுகிறது. 

அந்தப் பகுதியில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் மாணவர்கள் ஆவலோடு பள்ளிக்கு வருகை தந்தனர். ஆனால் ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வியில் ஆர்வம் காட்டாமல் அலட்சியமாகச் செயல்பட்டு தாமதமாக வந்து திறந்ததால் மாணவர்கள் கடுமைச் சிரமத்துக்கு உள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி