ஆம்பூர்: சந்தேகப்பட்டு மனைவியை துன்புறுத்திய கணவன்

ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (48). இவரது மனைவி விமலா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. சுரேஷ் மரம் ஏறும் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் இவரது மனைவி விமலா காலனி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். 

இந்நிலையில் சுரேஷுக்கு அவரது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி இருவரும் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் இன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் சுரேஷ் அவரது மனைவியைத் தாக்கியதாகவும், இதனால் மனைவி விமலா ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் சுரேஷ் மீது புகார் அளித்துள்ளார். 

இதனை அறிந்த சுரேஷ் உமராபாத் காவல் நிலையத்தில் மதுபோதையில் சென்று புகார் அளிக்கச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், திடீரென பின்புறமாகச் சென்று காவல் நிலைய வளாகத்தில் உள்ள தென்னைமரத்தில் ஏறி, தனது மனைவியைச் சேர்த்துவைக்கக் கோரி மிரட்டல் விடுத்து வந்துள்ளார். 

இரவு நேரம் என்பதால் செய்வது தெரியாமல் திகைத்த காவல்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் மரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த சுரேஷைக் கீழே இறக்கினர். இதனைத் தொடர்ந்து அவர் மதுபோதையில் இருந்ததால் ஆம்பூர் வட்டாட்சியர் ரேவதி மற்றும் காவல்துறையினர் பேசி அனுப்பிவைத்தனர்.

தொடர்புடைய செய்தி