திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த செல்லரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு ( 40 )
இவர் மருத்துவம் படிக்காமல் மாடப்பள்ளி அடுத்த குள்ளாளர் தெரு பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவருடைய வீட்டை வாடகைக்கு எடுத்து கிளினிக் வைத்து சுமார் பத்து வருடங்களாக மருத்துவம் பார்த்து வருவதாக திருப்பத்தூர் மருத்துவமனை முதன்மைமருத்துவ அலுவலர் சிவகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அவருடைய உத்தரவின் பேரில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருந்தாளுநர்கள் குருராகவன் மற்றும் கார்த்திக் ஆகியோர் நோயாளிகள் போல மருத்துவம் பார்க்க கிளினிக்கு சென்றுள்ளனர்.
அப்போது திருநாவுக்கரசு மருத்துவம் பார்ப்பதை ரகசியமாக வீடியோவாகவும் எடுத்து இது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு இருவரும் தகவல் கொடுத்தனர்.
இதனை அறிந்த திருநாவுக்கரசு அதிகாரிகள் அசந்த நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் அப்போது புருஷோத்தமன் மருத்துவர் என்கிற சான்றிதழின் பெயரில் இவர் மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.
மேலும் இவரிடமிருந்து லேப்டாப், தடை செய்யப்பட்ட மருந்துகள், காலாவதியான மருந்துகள், மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் அரசுக்கு சொந்தமான மருந்துகளும் இந்தக் கிளினிக்கில் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் இவருக்கு எவ்வாறு கிடைத்தது மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள பணியாளர்கள் மூலம் இவருக்கு ஏதேனும் மருந்துகள் கிடைக்கிறதா? என்கிற வண்ணமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து இந்த கிளினிக்கு அருகே இருந்த மற்றொரு அறையை
திறந்தபோது ஒரு மினி பார்மஸியே இருந்துள்ளது மேலும் இதிலிருந்து மூன்று லட்சம் மதிப்பிலான மருந்து பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்த கிளினிக்கிக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர் அதனைத் தொடர்ந்து தப்பி ஓடிய திருநாவுக்கரசை திருப்பத்தூர் கிராமிய போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.