தி.மலை: நகர மன்ற கூட்டத்தில் உள்ளிருப்பு போராட்டம்

வந்தவாசி நகராட்சி அலுவலக மன்றக்கூடத்தில் நேற்று நடைபெற்ற நகர மன்ற கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் (திமுக) எச். ஜலால் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் ஆர். சோனியா, துணைத் தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மயானத்துக்கு பாதை அமைக்க வேண்டும், புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், நகரில் சரிவர தூய்மைப் பணி மேற்கொள்ளாத தனியார் ஒப்பந்த துப்புரவு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நீரேற்று நிலையத்தில் அடிக்கடி மின்மோட்டார் பழுது எனக் கூறி பணம் முறைகேடாக செலவிடுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி உறுப்பினர்கள் நகர்மன்ற கூட தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். 

இதில் திமுக, விசிக, பாமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஷீலா மூவேந்தன், ஆர். அன்பரசு, மு. பீபிஜான், எஸ். நூர்முகமது, ஹஸீனா கன்சையது, கு. நாகூா்மீரான், பா்வீன்பேகம் மீரான், ரிஹானா சையத்அப்துல்கறீம், பா. சரவணகுமார், பா. சந்தோஷ், கு. ராமஜெயம் ஆகிய 11 உறுப்பினர்கள் ஈடுபட்டனர். அப்போது, கூட்டம் முடிவடைந்து விட்டதாகக் கூறி தலைவர் எச். ஜலால் வெளியேற, அவரைத் தொடர்ந்து அதிகாரிகள் வெளியேறினர். இதனால் கோபமடைந்த நகர்மன்ற உறுப்பினர்கள் 11 பேரும், தலைவர் மற்றும் ஆணையரை கண்டித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி