தி.மலை: பாடப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

தமிழகம் முழுவதும் திங்களிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அந்தந்த பள்ளிகளில் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை நகராட்சி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான பாடப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தலைமை வகித்தார். சி. என். அண்ணாதுரை எம்.பி. முன்னிலை வகித்தார். சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் பள்ளி உபகரணங்களை வழங்கிப் பேசியதாவது: கல்வி ஒன்று மட்டுமே நம்மை வாழ்வில் உயர்த்தும். 

கல்வியை யாராலும் திருடவோ, அழிக்கவோ முடியாது. நம் நாட்டவர்கள் பல்வேறு நாடுகளில் உயர்ந்த நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பதற்குக் காரணம் அவர்கள் கற்ற கல்விதான். ஒரு காலத்தில் உயர்கல்வி கற்க வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இப்போது மாணவ-மாணவிகள் அவர்களது மாவட்டத்திலேயே மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளையும் படிக்கும் நிலை உள்ளது. இவற்றையெல்லாம் மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து, கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி