தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியைச் சேர்ந்த முருகன் மனைவி லதா (42). கூட்டுறவுத் துறையில் அலுவலராகப் பணியாற்றும் இவா், சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உறவினா் இல்ல நிகழ்வில் பங்கேற்பதற்காக காரில் வியாழக்கிழமை இரவு புறப்பட்டாா்.
லதாவுடன், அவரது மகன் பிரணவ் (10), லட்சயா (9) மற்றும் உறவினரான தென்காசி மாவட்டம், கடையநல்லூா் திருமலாபுரத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் வேலாயுதம் (44) ஆகியோரும் வந்தனா். இந்த காரை முருகேசன் ஓட்டி வந்தாா்.இவா்கள் வந்த காா் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தது.
விருத்தாசலம் சாலைக்குச் செல்லும் மேம்பாலம் அருகே காா் வந்த போது, சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.விபத்தில் வேலாயுதம் பலத்த காயமடைந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். லதா, லட்சயா உள்ளிட்ட 4 பேரும் காயமடைந்தனா். இவா்களில் லதா மற்றும் அவரது மகள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.