திருவண்ணாமலையில் நடைபெற்ற வணிகர் சங்க பேரமைப்பு மாநில கூடுதல் செயலாளர் ராஜசேகரன் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. எனவே, தமிழக அறநிலையத்துறை உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்கள் நிறுத்த இடவசதியை செய்து தர வேண்டும். தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் மாநாடு, கூட்டங்கள் நடத்தும்போது அந்தப் பகுதிகளில் உள்ள கடைகளை மூடச் சொல்லும் நிலைப்பாட்டை தவிர்க்க வேண்டும். தமிழக முதல்வர் 24 மணி நேரமும் கடைகளைத் திறக்கலாம் என்று கூறியுள்ள நிலையில், போலீசார் இரவு 11 மணிக்குள் கடைகளை அடைக்குமாறு கூறுகின்றனர். இதை ஏற்க முடியாது. போலீசார் கடைகளை மூட வேண்டும் எனக் கூறுவதை விட்டுவிட்டு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். திருவண்ணாமலை நகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க போக்குவரத்துப் பிரிவில் கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என்றார்.