திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் முதியவர் தற்கொலை

திருவண்ணாமலை ரயில் நிலையம் வழியாக புதன்கிழமை (ஜன. 1) இரவு 11.35 மணிக்கு புதுச்சேரியில் இருந்து மும்பை தாதர் செல்லும் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதைக் கவனித்த சக பயணிகள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றபோது அவர் இறந்திருந்தது தெரியவந்தது. 

இதுகுறித்து, விழுப்புரம் ரயில்வே போலீசாருக்கு பயணிகள் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வியாழக்கிழமை அதிகாலை வந்த ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் முத்துச்செல்வம் தலைமையிலான போலீசார், சடலத்தை கைப்பற்றி, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர், வேலூர் மாநகராட்சி, வேலப்பாடி, கோவிந்தசாமி லே-அவுட் பகுதியைச் சேர்ந்த சரவணமூர்த்தி (64) என்பதும், இவர், வேலூரில் இயங்கி வரும் பிரபல தனியார் மருந்துக் கடையின் உரிமையாளர் என்பதும் தெரியவந்தது. 

இவர், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதி வைத்திருந்த கடிதத்தை உதவி ஆய்வாளர் முத்துச்செல்வம் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார். கடிதத்தில் என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி வைக்கப்பட்டு உள்ளதாம். இந்தக் கடிதத்தை வைத்து ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி