திருவண்ணாமலையில் மது, மாமிச கடைகளை அகற்ற வேண்டும்; அர்ஜூன் சம்பத்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் புதுவை ஆதீனம் மார்க்கண்டேயர் திருமடம் சார்பில், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவாக்கப்பட்ட மகா ருத்ராட்ச சிவலிங்க பிரதிஷ்டை விழா நடைபெற்றது. 

விழாவில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், கிரிவலப் பக்தர்களுக்கு நெற்றியில் திருநீறு பூசி, இலவசமாக ருத்ராட்சம் அணிவிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல லட்சம் பக்தர்கள் குவியும் திருவண்ணாமலைக்கு சிறப்பு நிதியை தமிழக அரசு ஒதுக்கி, பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அருணாசலேஸ்வரர் கோயில், கிரிவலப் பாதையின் புனிதத் தன்மையை பாதுகாக்கவும், கிரிவலத்தின் மகிமையை உணர்த்தவும் திருவண்ணாமலையை புனித மாநகராக அறிவித்து மது, மாமிச கடைகளை அகற்ற வேண்டும். 

கிரிவலப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பக்தர்கள் பாதுகாப்பாக கிரிவலம் செல்ல தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். மதுரையில் 22-ஆம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டைப் போலவே, சிவ பக்தர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்த வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி