தி.மலை: போலி நகைகள் அடகு வைத்து ₹2. 88 கோடி மோசடி

திருவண்ணாமலை காந்தி நகர் பகுதியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிழக்கு கிளை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வங்கியில் ஆண்டு தணிக்கை கடந்த சில நாட்களாக நடந்தது. 

கூட்டுறவு தணிக்கை துறை அலுவலர்கள் 7 பேர் கொண்ட குழுவினர் வங்கியில் வழங்கப்பட்ட கடன் விவரங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தினர். அப்போது, நகைக் கடன் வழங்கியது தொடர்பான ஆவணங்கள் மற்றும் நகைகளை ஆய்வு செய்ததில், போலி நகைகள் அடகு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது வரை 19 நபர்கள் அடகு வைத்த 151 நகைகள், கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது. அதன் மூலம், ₹2.88 கோடி கடன் வழங்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, நகைகளின் உண்மை தன்மை குறித்து நகைகளை சரிபார்க்கும் நபர்கள் மூலம் ஆய்வு செய்ததில் அனைத்தும் கவரிங் நகைகள் என்பது உறுதி செய்யப்பட்டது. 

எனவே, போலி நகைகளை திட்டமிட்டு அடகு வைத்து பணம் பெற்று இருக்கலாம் என்பது உறுதியானது. வங்கியில் பணிபுரியும் அதிகாரிகளின் உடந்தையுடன் இந்த மோசடி நடந்ததா என துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக மாவட்ட மத்திய கூட்டுறவு கிழக்கு கிளையின் மேலாளர் விஜி, உதவி மேலாளர் மற்றும் 3 உதவியாளர்கள் உட்பட 5 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் ஜெயம் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி