தி.மலை: மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாநகரச் செயலர் எம். பிரகலநாதன் தலைமையிலான நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இயங்கும் இரு சக்கர வாகன பாதுகாப்பு மையத்தில் இரு சக்கர வாகனம் ஒன்றுக்கு 24 மணி நேரத்துக்கு ரூ. 10 வசூலிப்பது என்று மாநகராட்சி ஒப்பந்தப் புள்ளியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை மீறி ஒரு வாகனத்துக்கு 24 மணி நேரத்துக்கு ரூ. 25 முதல் ரூ. 30 வரை வசூலிக்கப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனம் வைத்திருக்கும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். 

மத்திய பேருந்து நிலைய கழிப்பறையில் பொதுமக்களிடம் இருந்து ரூ. 10 வசூலிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, முறையான கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரம் முழுவதும் நடைபெறும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியால் ஏற்படும் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஒரு தெருவில் கால்வாய் பணியை முடித்த பிறகே அடுத்த தெருவில் பணியைத் தொடங்க வேண்டும். திருவண்ணாமலை நகரில் போக்குவரத்தை முறைப்படுத்துவதற்காக பல தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி