தி.மலை: வங்கியில் எடுத்த பணத்தை திருடி சென்ற மர்ம கும்பல்

செங்கம் அடுத்த பீமானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி தீபா(42), அங்கன்வாடி பணியாளர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி தம்பதி இருவரும் செங்கத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ₹5.26 லட்சத்தை எடுத்து கொண்டு, மொபட்டில் வைத்து பூட்டி விட்டு அருகாமையில் உள்ள கடையில் டீ குடிக்க சென்றனர். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மொபட் பெட்டியை உடைத்து ₹5.26 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் செங்கம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். 

தொடர்ந்து, திருவண்ணாமலை எஸ்பி உத்தரவின்பேரில் செங்கம் சப்-இன்ஸ்பெக்டர் நஸ்ருதீன் தலைமையில் தலைமை காவலர்கள் குணா, மாதேஸ்வரன், சந்திரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். அதில், கர்நாடக மாநிலம், பத்ராவதி பகுதியை சேர்ந்த பாபு மகன் வெங்கடேஷ்(42) என்பவர் உட்பட 4 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து மும்பையில் பதுங்கியிருந்த வெங்கடேஷை தனிப்படை போலீசார் கைது செய்து செங்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், அவரிடம் இருந்து ₹1.50 லட்சம் ரொக்கம், கொள்ளையில் ஈடுபட பயன்படுத்திய கம்பி மற்றும் கருவிகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி