தி.மலை: அரசு இசைப்பள்ளியில் மாணவச் சேர்க்கை

திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்திருப்பதாவது: தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்படும் திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செங்கம் சாலை சந்திப்புக்கு அருகே சமுத்திரம் பகுதியில் செயல்படுகிறது. 

இப்பள்ளியில், பாரம்பரியக் கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி வகுப்புகள் வாரநாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறும். 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சேரலாம். சேர்க்கை கட்டணமாக முதலாம் ஆண்டுக்கு ரூ. 350 இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு கட்டணமாக ரூ.325 செலுத்த வேண்டும். மேலும், இலவச பஸ் பாஸ் மற்றும் மாதந்தோறும் ரூ. 400 கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது. 

இசைப்பள்ளியில் பயிற்சி பெறுவோருக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணிபுரியவும், நாதஸ்வரம், தவில் மற்றும் தேவாரம் பயிற்சி பெற்றவர்களுக்கு திருக்கோயில்களில் பணிபுரியவும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. எனவே மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி