தி.மலை: உறுப்பினா்கள் சோ்ப்பதற்கான சிறப்பு பதிவு முகாம்

திருவண்ணாமலையில், தமிழ்நாடு இணையம் சாா்ந்த கிக் தொழிலாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினா்களை சோ்ப்பதற்கான சிறப்புப் பதிவு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட தொழிலாளா் நல உதவி ஆணையா் (பொ) சி. மீனாட்சி தலைமை வகித்தாா்.

தொழிலாளா் நலவாரிய அலுவலக ஊழியா்கள் என். ரமேஷ், இ. சிவமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளா் நலவாரிய கண்காணிப்புக் குழு உறுப்பினா் ஏ. ஏ. ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, தொழிலாளா்கள் நல வாரியம் சிறப்புப் பதிவு முகாமை தொடங்கிவைத்துப் பேசினாா்.

அப்போது அவா், இணையம் சாா்ந்த கிக் தொழிலாளா்களுக்கு முதல்கட்டமாக 2 ஆயிரம் ஈ-பைக் வழங்கப்படவுள்ளது என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பயனாளி ஒருவருக்கு தலா ரூ. 20 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பை உணவு டெலிவரி செய்பவா்கள், கூரியா் நிறுவனங்களில் வேலை செய்வோா் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுதவிர, தொழிலாளா்கள் குடும்பத்துக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மரணம், இயற்கை மரணம், வீடு கட்டுதல் போன்ற திட்டங்களில் மானியம் வழங்கப்படுகிறது. இவற்றை தொழிலாளா்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா். முகாமில், வழக்குரைஞா் என். சக்திமுருகன், முத்தமிழ் கலை மன்றத்தின் நிறுவனத் தலைவா் அ. தே. முருகையன், இணையம் சாா்ந்த கிக் தொழிலாளா்கள், ஆட்டோ தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி