கூட்டத்தில், மாவட்டத்தின் 18 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியர் க. தர்ப்பகராஜ், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25 நிதியாண்டில் கட்டப்படும் 3,114 வீடுகள், 2025-26 நிதியாண்டில் கட்டப்படும் 5,378 வீடுகளின் பணி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.
இதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் 2024-25 நிதியாண்டில் 2,305 சிறிய அளவிலான பழுதுகள், 2,910 பெரிய அளவிலான பழுதுகள் என மொத்தம் 5,215 வீடுகள் பழுதுபார்க்கும் பணியின் இப்போதைய நிலவரம் குறித்து ஆய்வு செய்த ஆட்சியர் க. தர்ப்பகராஜ், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், இலங்கைத் தமிழர்களுக்கான வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் அடிஅண்ணாமலை, சமுத்திரம், அத்தியந்தல், கண்ணந்தம்பூண்டி, சொரகுளத்தூர், தென்பள்ளிப்பட்டு, கஸ்தாம்பாடி, தவசி, செங்காட்டன்குன்றில், பாப்பந்தாங்கல், ஓசூர் ஊராட்சிகள் என மொத்தம் 830 வீடுகள் கட்டும் பணியை தரமாக செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.