திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நெடுஞ்சாலைத் துறை உள்கோட்டத்தில், முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம் 2004 - 2025இன் மூலம், இருவழிப் பாதையாக இருந்து வரும் செய்யாறு - காஞ்சிபுரம் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றவும், அகலப்படுத்தி உறுதிப்படுத்தவும், சிறு பாலங்கள் திரும்பக் கட்டுதல், தடுப்புச் சுவர் அமைத்தல், சாலை சந்திப்பு அமைத்தல் மற்றும் மையத் தடுப்புச் சுவர் அமைத்தல் என 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.10 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளுக்கு இடையூறாக பல்லி, தும்பை, கிளியாத்தூர் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்து வந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை செய்யாறு கோட்டப் பொறியாளர் வி. சந்திரன் மேற்பார்வையில், வட்டாட்சியர் அசோக்குமார், டி.எஸ்.பி. சண்முகவேலன் ஆகியோர் முன்னிலையில் அகற்றும் பணி நடைபெற்றது.
இதில், நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் எஸ். சுரேஷ், உதவிப் பொறியாளர்கள் எஸ். உதயகுமார், கோபி, செய்யாறு காவல் ஆய்வாளர் ஜீவராஜ் மனிகண்டன் தலைமையிலான போலீசார், வருவாய்த் துறை, மின்வாரியத் துறை அலுவலர்கள், நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் ஒருங்கிணைந்து ஈடுபட்டனர்.