சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 114 அடியாக குறைந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் 114 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பருவமழை கைகொடுத்ததால் அணைகள், ஏரிகள், கிணறுகள் முழு கொள்ளளவை எட்டியிருந்தன. அதன் அடிப்படையில், சாத்தனூர் அணை முழு கொள்ளளவான 119 அடியை எட்டியதும், கடந்த மாதம் 31ம் தேதி முதல் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மே 11ம் தேதி வரை தொடர்ந்து 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது அணையின் நீர்மட்டம் 114.40 அடியாகவும், நீர் இருப்பு 6347 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அப்பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் சாகுபடிக்கு தென் பெண்ணை வழியாக விரைவில் தண்ணீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி