திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெரியகோளாபாடி கிராமத்தில் தமிழக அரசால் 100 வீடுகளுடன் கட்டப்பட்ட பெரியாா் நினைவு சமத்துவபுரத்தை சென்னையிலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதன் தொடா்ச்சியாக, சமத்துவபுரத்தில் பயனாளிகளுக்கு அரசு மூலம் வழங்கப்பட்ட வீடுகளின் சாவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை துணைத் தலைவா் கு. பிச்சாண்டி கலந்துகொண்டு 100 பயனாளிகளுக்கும் வீடுகளின் சாவிகளை வழங்கிப் பேசுகையில், முதல்வா் மு. க. ஸ்டாலின் பல்வேறு அரசு நலத் திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருவதாகவும், முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சமத்துவபுரங்கள் தற்போது சீரமைக்கப்படுவதுடன், புதிய குடியிருப்புகள் கட்டவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தாா்.