திருவண்ணாமலை: 75 போதை மாத்திரைகள், 13 ஊசிகள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சரக போலீஸார் கழனிபாக்கம் கிராமப் பகுதியில் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது, அந்தப் பகுதியில் போதையில் சுற்றிக் கொண்டிருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 

இதில், பிடிபட்டவர் போதை ஊசி மற்றும் போதை மாத்திரையை பயன்படுத்தியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட போலீசார் கழனிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் (24), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், இவர், தனது வீட்டின் மாடியில் போதை மாத்திரை மற்றும் ஊசியை பயன்படுத்துவதும், அதனை மற்றவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. 

இதைத் தொடர்ந்து, தினேஷ்குமார் அளித்த தகவலின் பேரில், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், தேவதானம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (28), வாலாஜா பகுதியைச் சேர்ந்த கோபி (23), ஞானசேகர் (21) உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். 

மேலும், இவர்களுக்கு சித்தூர் மாவட்டத்தில் இருந்து போதை மாத்திரை மற்றும் ஊசியை விநியோகம் செய்வதாக தெரிவித்துள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 75 போதை மாத்திரைகள், 13 ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேரையும் செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி