தி.மலை: தரையில் அமர்ந்து மாணவர்கள் திடீர் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் கண்ணமங்கலம் பேரூராட்சி சார்பில் ரூ. 7 கோடியில் கழிவுநீர் மறுசுழற்சி சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றினர். 

இதனிடையே, கிராம மக்களுக்கு ஆதரவாக அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் சுமார் 135 பேர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கையில் பதாகைகள் மற்றும் கருப்புக் கொடிகளை ஏந்தியபடி தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஆரணி கோட்டாட்சியர் சிவா மற்றும் வட்டாட்சியர் கௌரி வந்து மாணவர்களை சமாதானப்படுத்தினர். வட்டாட்சியர் கௌரி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதால் எவ்வித பாதிப்பும் வராது. ஏற்கெனவே சுத்திகரிப்பு நிலையம் உள்ள இடங்களில் செயல்படும் விதத்தை வீடியோ பதிவு மூலம் மாணவர்களுக்கு விளக்கினார். இதை ஏற்க மறுத்து மாணவ, மாணவிகள் தங்களது போராட்டத்தை மாலை வரை தொடர்ந்தனர். பின்னர், மறுநாள் போராட்டத்தை பொதுமக்களுடன் தொடர்ந்து மேற்கொள்வதாகக் கூறி அனைவரும் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி