தி.மலை: இபிஎஸ் அறிவிப்பால் அதிமுகவினர் குழப்பம்

திருவண்ணாமலை மாவட்டம் அதிமுக கட்சி சார்பில் திருவண்ணாமலை வடக்கு தெற்கு மத்தியம் என 3 பிரிவுகளாக பிரித்து ஆரணி போளூர் தொகுதி உட்பட்டவைக்கு மத்திய மாவட்ட செயலாளராக போளூர் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயசுதாவை அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. பின்னர் மத்திய மாவட்டம் சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கு பதவி வழங்கப்பட்டன. 

மேலும் மீதியுள்ள கட்சி பதவிகளுக்கு நேற்று முன்தினம் மத்திய மாவட்டம் பரிந்துரையின் பேரில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் ஆரணி அருகே அக்ராபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் முத்துகிருஷ்ணன் (62) இவர் அதிமுக தீவிர விசுவாசியாக இருந்து கட்சி பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பணிபுரிந்து வந்தார். 

திடீரென கடந்த மார்ச் 16ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். பின்னர் அதிமுக ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் தற்போது திடீர் திருப்பமாக நேற்று முன்தினம் அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு பதவி வழங்கப்பட்ட செய்தி அதிமுக அதிகாரபூர்வ நாளிதழ் 'நமது அம்மா'வில் வெளியானது. 

இதில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் முத்துகிருஷ்ணன் என்பவருக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கண்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி