சேலம் அருகே சிற்பி கத்தியால் குத்திக்கொலை.. மைத்துனர் கைது

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே பனங்காடு பகுதியை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ் (வயது 27), சிற்பி. இவருடைய தங்கை சம்யுக்தா (24). இவர் மல்லூரை அடுத்த பசுவநத்தம்பட்டியை சேர்ந்த மைக்செட் தொழிலாளியான சிவா (32) என்பவரை காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயது ஆண் குழந்தை உள்ளது.

கடந்த சில நாட்களாக தம்பதி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்யுக்தா தனது அண்ணன் சூரியபிரகாசிடம் கூறியுள்ளார். சூரியபிரகாஷ் தங்கை சம்யுக்தாவை, கடந்த 27-ம் தேதி கொண்டலாம்பட்டி மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று சிவா மீது புகார் அளித்தார். 

இந்த நிலையில் பனங்காடு செல்லும் வழியில் பெருமாள் கோவில் அருகே வந்த மைத்துனர் சூர்யபிரகாஷ் மற்றும் மனைவி சம்யுக்தாவை வழிமறித்த சிவா அவர்களிடம் தகராறு செய்துள்ளார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சூரியபிரகாஷை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

இதனிடையே இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மல்லூர் போலீசார் சிவாவை கடந்த 30-ம் தேதி கைது செய்தனர். சிகிச்சை பெற்று வந்த சூரியபிரகாஷ்( ஜன, 1) நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி