திருப்பூர்: செல்போன் திருடும் ஆசாமி; வீடியோ வைரல்

உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு நாள்தோறும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். ஆனால் பஸ் நிலையத்தில் உலாவரும் சமூக விரோதிகளால் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. அதை உணர்த்தும் சம்பவம் தான் நேற்று இரவு 9.30 மணியளவில் நடைபெற்றது. 

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பஸ் நிலையத்தில் மாலை முதல் இரவு வரையிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியுள்ளது. போதைக்கு அடிமையான கூலித் தொழிலாளர்கள் பஸ்களுக்காக காத்திருக்கும் போது அயர்ந்து தூங்கி விடுகின்றனர். இதை நோட்டமிடும் சமூக விரோதிகள் அவர்களின் பாக்கெட்டில் இருந்து செல்போன், ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்று விடுகின்றனர். இதுபோன்ற சம்பவம் தான் நேற்று இரவு நடைபெற்றது. போதையில் அயர்ந்து தூங்கிய கூலித் தொழிலாளரிடம் ஆசாமி ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ உடுமலைப் பகுதி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலீசார் ரோந்து பணியில் ஈடுபடாததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாகும். எனவே உடுமலை மத்திய பஸ் நிலையப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறையும் வகையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது அவசியமாகும் என்று தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி