உடுமலை: மருமகளின் தலைமுடியை பிடித்து இழுத்த மாமனார்..சிறையில் மரணம்

உடுமலை அடுத்த அய்யம்பாளையம் புதூரை சேர்ந்தவர் வேலுச்சாமி (60). கூலித்தொழிலாளி. இவர் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து ரகளை செய்வது வாடிக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 8-ம் தேதி வேலுச்சாமி வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. 

அப்போது வேலுச்சாமி அவரது மருமகளின் தலைமுடியை பிடித்து இழுத்து பிரச்சினை செய்துள்ளார். அதைத் தொடர்ந்து அவரது மருமகள் புனிதா(28) குடிமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த மாதம் 9-ம் தேதி வேலுச்சாமியை கைது செய்து உடுமலை கிளைச்சிறையில் அடைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக அவர் சிறையில் இருந்து வந்தார். இந்த சூழலில் கடந்த மாதம் 31-ம் தேதி அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து போலீசார் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின்பு மீண்டும் சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார். 

இந்த நிலையில் அதிகாலை சுமார் 1.40 மணியளவில் மீண்டும் வேலுச்சாமிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி