உடுமலையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் பரபரப்பு பேட்டி

திருப்பூர் மாவட்டம் உடுமலை தனியார் திருமண மண்டபத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் இட ஒதுக்கீடு மீட்பு கருத்தரங்கம் மற்றும் நிர்வாகிகள் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நிறுவனர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தின் முதல் சர்க்கரை ஆலையான அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை ரூ 100 கோடியில் புனரமைப்பு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் வளர்ச்சி அடையும். பட்டியலின மக்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் பல்வேறு சமுதாய மக்கள் உள்ளனர். ஆனால் ஒரே சமுதாயத்திற்கு மொத்த இட ஒதுக்கீடும் கொடுக்கப்படுவதால் மற்ற சமுதாயத்தினர் பாதிக்கப்படுகின்றனர். 

எனவே இட ஒதுக்கீட்டில் அனைவருக்கும் சமமான உரிமை வழங்க வேண்டும். புதிதாக அமையவுள்ளதாக கூறப்படும் பழனி மாவட்டத்துடன் உடுமலை பகுதி இணைக்கப்படுவதாக தகவல் பரவி வருகிறது. அந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும். புதிய மாவட்டம் அமைவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டால் வால்பாறை, பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதியை ஒன்றிணைத்து ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கக்கூடிய உடுமலையை தலைமை இடமாகக் கொண்டு புதிதாக மாவட்டத்தை உருவாக்க வேண்டும். இல்லையெனில் பொது மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி