திருப்பூர்: சாக்கடையில் மஞ்சள் நிறத்தில் ஓடிய சாயக் கழிவுநீர்

திருப்பூரில் பின்னலாடை சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. பின்னலாடைகளுக்கு சாயம் ஏற்றும் சாய ஆலைகள் திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்றன. திருப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக சாய ஆலைகளில் உள்ள கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்த வேண்டும். இந்த ஜீரோ டிஸ்சார்ஜ் முறையால் பொது இடங்களில் சாயக்கழிவு நீர் திறந்து விடுவது குறைக்கப்பட்டது. இருப்பினும் ஒருசில சாய ஆலைகளில் அவ்வப்போது கழிவுநீர் கால்வாயில் சாயக்கழிவு நீரை திறந்து விடுகின்றனர். 

மேலும் மழைக்காலத்தில் மழைநீருடன் சாயக்கழிவு நீரை திறந்து விடுகின்றனர். திருப்பூர் சூசையாபுரம் பகுதியிலும் பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு நேற்று கழிவுநீர் கால்வாயில் சாயக்கழிவு நீரை திறந்து விட்டுள்ளனர். இதனால் கழிவுநீர் கால்வாயில் மஞ்சள் நிறத்துடன் சாயக்கழிவு நீர் அதிக அளவில் சென்றது. சுத்திகரிப்பு செய்யாமல் இவ்வாறு தண்ணீரை திறந்து விடுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீருடன் வெளியேற்றும் ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

தொடர்புடைய செய்தி