விபத்தில் தந்தை இறந்த நிலையிலும் பிளஸ்-2 தேர்வு எழுதி அரசு பள்ளியில் 2-வது இடம் பெற்ற மாணவி சேவூர் அருகே புலிப்பார் ஊராட்சியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 43). அவன் நாசிக் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுமதி தையல் தொழிலாளி. இவர்களது மகள்கள் முத்தமிழ்யாழினி (17), தங்கமித்ரா (15) சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழ்யாழினி 12-ம் வகுப்பும், தங்கமித்ரா 10-ம் வகுப்பும் படிக்கின்றனர். இந்த நிலையில் 12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக பிப்ரவரி மாதத்தில் செய்முறை தேர்வு நடைபெற்ற போது முத்தமிழ்யாழினியின் தந்தை சாலை விபத்தில் உயிரிழந்தார். தந்தை இறந்த நிலையில் 12-ம் வகுப்பு தேர்வு எழுதி 600-க்கு 522 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-வது இடமும், அறிவியல் பிரிவில் முதலிடமும் பெற்றுள்ளார். மாணவி முத்தமிழ்யாழினியை, பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.