திருப்பூர்: சாலையை சீரமைக்கக்கோரி.. எஸ். டி. பி. ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாநகராட்சி 50-வது வார்டுக்கு உட்பட்ட குமாரசாமி காலனி மெயின் ரோடு குண்டும், குழியுமாக விபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இந்த சாலை பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அல் அமீன் பள்ளி, செல்லப்பாபுரம் நடுநிலைப்பள்ளி, அரண்மனைப்புதூர் தொடக்கப்பள்ளி, பழைய நகர் தொடக்கப்பள்ளிக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையில் குடிநீர் குழாய் உடைந்து ஆறாக பாய்கிறது. பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் சைக்கிளில் செல்லும்போது தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. 

இந்த சாலையை சீரமைக்காததை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பெரியதோட்டம் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட துணை தலைவர் ஜாபர் சாதிக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சாலையில் சென்றால் விபத்தில் சிக்குவார்கள் என்பதை தெரிவிக்கும் வகையில் கட்டுகளுடன் உருவபொம்மையை பாடையில் ஏந்தி வந்தும் போராட்டம் நடத்தினார்கள். 

சாலையை சீரமைக்க தாமதப்படுத்தினால் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி