திருப்பூர்: குடிநீர் குழாய் உடைப்பால் சேதமான சாலை

திருப்பூர் மாநகரில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் பணி முடிந்து குடிநீர் வழங்க சோதனைகள் நடைபெறுகிறது. 

அதில் பல்வேறு இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி சாலையில் சென்று கால்வாயில் கலக்கிறது. அவ்வப்போது சேதமான பகுதிகளை பார்வையிட்டு அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே பதிக்கப்பட்ட குடிநீர் குழாயும் உடைப்பு ஏற்பட்டு தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. அதுபோல் திருப்பூர் மத்திய பஸ் நிலையம் முன்பு பல்லடம் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்தியில் பள்ளம் ஏற்பட்டு அதில் சாலையும் சேதமாகியுள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து செல்வதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது. 

குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில்தான் பல்லடம் செல்ல பஸ் ஏறுவதற்காக பயணிகள் காத்திருப்பார்கள். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வேகமாக செல்வதால் தண்ணீர் காத்திருக்கும் பயணிகள் மேல் பட்டு அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் போக்குவரத்து நிறைந்த பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதை சரிசெய்து, சாலையில் உள்ள பள்ளத்தை மண் கொட்டி சீர் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தொடர்புடைய செய்தி