திருப்பூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய இரும்பு தடுப்புகள்

திருப்பூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் போக்குவரத்து போலீசார் விபத்தை தடுக்கும் வகையில் சாலையை ஒருவழிப்பாதையாகவும், சாலையின் நடுவில் இரும்பு தடுப்புகள் அமைத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் முக்கியமான கடைவீதிகள் மற்றும் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படும். 

கண்காணிப்பு தீவிரம் தற்போது ஆங்கில புத்தாண்டு மற்றும் அதைத்தொடர்ந்து பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் கூட்டநெரிசல் அதிகம் உள்ள இடங்களிலும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களிலும் இரும்பு தடுப்புகள் வைப்பதற்கு திருப்பூர் வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு புதிய இரும்பு தடுப்புகள் வாங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உடைந்த இரும்பு தடுப்புகளை அகற்றி புதிய தடுப்புகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆங்கில புத்தாண்டு நெருங்குவதால் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி