திருப்பூர்: சாலையோரம் இருந்த மூங்கில் மரங்களை வெட்டிய மர்ம நபர்கள்

திருப்பூர் பி.என். ரோடு போயம்பாளையத்தை அடுத்த மும்மூர்த்திநகர் பஸ் நிறுத்தம் அருகே வருவாய்த்துறை மற்றும் இளங்கோ என்ற தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஏராளமான மூங்கில் மரங்கள் இருந்தன. அங்கு பஸ் ஏறுவதற்காக வரும் பயணிகளும், அப்பகுதி பொதுமக்களும் நீண்ட நாட்களாக வெயிலுக்கு நிழலாக அந்த மரங்களை பயன்படுத்தி வந்தனர். 

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், உரிய அனுமதியின்றி அந்த மரங்களை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், உரிய அனுமதியுடன் மரம் வெட்டுகிறீர்களா? என்று கேட்டு எச்சரித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். 

ஆனால் அதையும் மீறி அந்த மர்ம நபர்கள் 20-க்கும் மேற்பட்ட மூங்கில் மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. உரிய அனுமதி இன்றியும், போலீசாரின் எச்சரிப்பை மீறியும் மரங்களை வெட்டிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி