திருப்பூர்: குழந்தை திருமணம் நடந்தால் இனி அவ்வளவுதான்; கலெக்டர்

குழந்தை திருமணத்தால் இளம் வயதில் கருத்தரித்தல், கருச்சிதைவு, ரத்தசோகை, எடை குறைவாக குழந்தை பிறத்தல், மனவளர்ச்சி குன்றிய குழந்தை பிறத்தல், தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்து ஏற்படும். 

எனவே குழந்தை திருமணத்தடை சட்டத்தின்படி, குழந்தை திருமணம் நடத்தியவர்கள், குழந்தை திருமணம் நடத்த தூண்டியவர்கள், குழந்தை திருமணங்களில் கலந்து கொள்பவர்கள் குற்றவாளிகள் ஆவார்கள். அவர்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் அல்லது 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் கோவில்களில் திருமணம் நடத்த முன்பதிவு செய்ய வருபவர்களிடம் மணமகள் மற்றும் மணமகன் ஆகியோரின் ஆதார் கார்டு மூலம் பிறந்த தேதி, நிரந்தர முகவரி ஆகியவற்றை உறுதி செய்த பின் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். 

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு குழந்தை திருமணத்தால் ஏற்படும் விளைவுகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் அறிவுறுத்த வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறுவது தெரிந்தால் உடனடியாக திருப்பூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட சமூக நல அதிகாரி, அறை எண். 35, கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், அறை எண். 705 என்ற முகவரியிலும், சைல்டுலைனை 1098 என்ற எண்ணிலும், பெண்கள் உதவி மையத்தை 181 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி