திருப்பூர்: வெடி விபத்தில் வீடுகள் சேதம்..

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் கார்த்தி என்பவரது வீட்டில் பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் அந்த பகுதியில் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் ஓடுகள் சிதறி கடும் சேதம் அடைந்தது. இதனால் அந்த வீடுகளில் இருந்த குடும்பத்தினர் மற்றும் தொழிலாளர்கள் அங்கு தங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் வீட்டில் தங்க முடியாத 30க்கும் மேற்பட்டவர்களை பாண்டியன் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அவர்களுக்கு உணவு உடை மற்றும் போர்வை உள்ளிட்டவற்றை வழங்கி அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர். மேலும் பாதிப்படைந்த சிலர் தங்கள் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று தங்கினார்கள். உறவினர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத பிற மாவட்ட மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் இவர்களுக்கு தங்க இடம் ஏற்பாடு செய்து தரப்படும் எனவும், பாதிப்படைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க பரிந்துரைக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் ஏதுமறியாத பொதுமக்கள் தங்கள் உடமைகளை இழந்து தவிப்பதை அறிந்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து உணவு, உடை என தங்களால் இயன்ற பொருட்களை கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி