திருப்பூர்: அச்சத்தை ஏற்படுத்தும் மின் கம்பங்கள்

திருப்பூர் மாநகர பகுதியில் ஆங்காங்கே சாலையோரங்கள் மற்றும் சாலை மையத் தடுப்புகளில் மின்கம்பங்கள் உள்ளன. இதேபோல் பல்வேறு வகையான கேபிள் வயர்களைத் தாங்கிச் செல்லும் இரும்புக் கம்பங்களும் நடப்பட்டுள்ளன. இவை சரியான முறையில் பராமரிக்கப்படாமல் இருப்பதால் மாநகரில் ஆங்காங்கே சில இடங்களில் சாய்ந்த நிலையில் உள்ளன. 

தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே செரீப் காலனி செல்லும் சாலையில் உள்ள ஒரு இரும்புக் கம்பம் மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளது. இது சாலையின் குறுக்காகச் சாய்ந்து நிற்பதால் இவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. ஏதேனும் வாகனம் மோதினாலும், பலத்த காற்று வீசினாலும் இந்தக் கம்பம் கீழே விழும் வாய்ப்பு உள்ளது. 

இதேபோல் ஆர்.வி.இ. லே-அவுட் 3-வது குறுக்கு வீதி அருகே உள்ள ஒரு கம்பமும் மிகவும் சாய்ந்து நிற்கிறது. இவ்வாறான கம்பத்தினால் எந்த நேரம் வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அச்சத்துடன் சாலையில் செல்கின்றனர். பார்ப்பதற்குச் சோதனைச்சாவடி போல் சாய்ந்து நிற்கும் இந்தக் கம்பங்களால் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் முன் சரிசெய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. கம்பங்களில் இணைக்கப்பட்டிருக்கும் வயர்கள் தொய்வடையாமல் அவ்வப்போது முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பாகும்.

தொடர்புடைய செய்தி