திருப்பூர்: விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் கலெக்டர் ஆலோசனை

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் கூலி தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. தொழிலாளர் உதவி ஆணையாளர் பிரேமா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்லடம், மங்கலம், சோமனூர், கண்ணம்பாளையம், வேலம்பாளையம், புதுப்பாளையம், தெக்கலூர், பெருமாநல்லூர், அவினாசி ஆகிய 9 விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், விசைத்தறி உரிமையாளர்களுக்கும் கடந்த 2022-ம் ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. 

ஆனால் இருதரப்பினரும் ஏற்றுக்கொண்ட கூலி உயர்வு ஒப்பந்தத்தில் இருந்து ரகம் வாரியாக 50 பைசா முதல் ரூ. 1 வரை ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்களுக்கு குறைத்து கொடுத்து வருகிறார்கள். எனவே ஒப்பந்தப்படி முழு கூலியை வழங்க வேண்டும் என்று விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் கலெக்டரிடம் தெரிவித்தனர். விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினரின் கருத்துக்களை கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர் இதுதொடர்பாக ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேசி அதன்பிறகு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி