திருப்பூர்: குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதை தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார். மேலும் எந்தவித தொழில்களிலும் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியமர்த்துவதை தடுக்கும் வகையில் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) காயத்திரி, தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், அனைத்து துறை அலுவலர்கள், சைல்டுலைன், விழுதுகள், சேவ் போன்ற தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் தொழிலாளர் துறை, திருப்பூர் சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் விழுதுகள் தன்னார்வ அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கிறிஸ்துராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

பின்னர் திருப்பூர், காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை பகுதிகளில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) காயத்திரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி