திருப்பூர்: குரூப்-1 தேர்வில் 3,202 பேர் பங்கேற்பு

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாக்கப்பட்ட அறையில் சீல் வைக்கப்பட்டிருந்தது. அந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் காலை அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டு அந்தந்த தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டது. 

திருப்பூர் மாவட்டத்தில் 10 இடங்களில் 16 தேர்வு மையங்களில் குரூப்-1 தேர்வு நடைபெற்ற நிலையில் 4 ஆயிரத்து 303 பேருக்கு அறைகள் ஒதுக்கப்பட்டது. குரூப்-1 தேர்வு எழுத 3 ஆயிரத்து 202 பேர் வந்திருந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரத்து 101 பேர் தேர்வு எழுத வரவில்லை. திருப்பூர் எல்.ஆர்.ஜி. மகளிர் கல்லூரியில் நடைபெற்ற குரூப்-1 தேர்வை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ. மோகன சுந்தரம் மற்றும் திருப்பூர் தெற்கு தாசில்தார் சரவணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 

தேர்வுகளை கண்காணிக்க 16 கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் 17 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். குரூப்-1 தேர்வு எழுத தேர்வர்கள் காலை 9 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தேர்வு நடைபெறும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி