திருப்பூரை அடுத்த கோயில்பாளையத்தில் பழைமையான தளிகீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயில் குறித்து அலகுமலை ஊராட்சித் தலைவா் தூயமணி வெள்ளைசாமி, கோயில் தா்மகா்த்தா கு. ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் கொடுத்த தகவலின்பேரில் திருப்பூா் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சோ்ந்த பொறியாளா் சு. ரவிகுமாா், பொன்னுசாமி ஆகியோா் கடந்த ஜூலை 5-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்ட னா்.
இந்த ஆய்வில் ஒரு வட்டெழுத்து மற்றும் 8 தமிழ் கல்வெட்டுகளையும் கண்டறிந்துள்ளனா்.
இதுகுறித்து ஆய்வு மையத்தின் இயக்குநா் பொறியாளா் சு. ரவிகுமாா் கூறியதாவது: திருப்பூரில் இருந்து தென்கிழக்காக அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரையிலுள்ள பெருவழியில் 14-ஆவது கிலோ மீட்டரிலும், மேற்குக் கடற்கரை நகரமான முசிறியில் இருந்து பாலக்காட்டுக் கணவாய் வழியாக வெள்ளலூா், சூலூா், காங்கயம், கரூா் வழியாக பூம்புகாா் வரை சென்ற பண்டைய கொங்கப் பெருவெளியில் அமைந்துள்ள கிராமம்தான் கோயில்பாளையம்.