பல்லடம் அருகே பூமலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் பற்றாக்குறை மற்றும் நிலத்தடி நீர் மாசடைதல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அன்றாட பயன்பாட்டிற்கு தண்ணீர் விலைக்கு வாங்க வேண்டியுள்ளது. மேலும், தெரு விளக்குகள் இல்லாததால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் மங்கலம்-பல்லடம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த மங்கலம் போலீசார் மற்றும் ஊராட்சி செயலர் பேச்சுவார்த்தை நடத்தினர். 15 நாட்களுக்குள் பிரச்சனைகள் சரிசெய்யப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.