திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த கேத்தனூர் பகுதியில் லாரிகளில் கிராவல் மண் கடத்தப்படுவதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, உதவி புவியியலாளர் வெங்கடேசன் தலைமையில் தனி வருவாய் ஆய்வாளர் பெத்தராஜ் குழுவினர் சுல்தான்பேட்டை-கேத்தனூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கிராவல் மண் ஏற்றிச் சென்ற 2 லாரிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இந்த லாரிகள் சுல்தான்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து கேத்தனூருக்கு மண் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.