ஊத்துக்குளி: ரூ. 65 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ஊத்துக்குளி தாலுகா சுண்டக்காம்பாளையம் ஊராட்சியில் வருவாய் நிர்வாகம் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் திருப்பூர் ஆர்.டி.ஓ. மோகனசுந்தரம், தலைமை தாங்கினார். 

தாட்கோ தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் 9 பேருக்கு சுயதொழில் முனைவோர் நலத்திட்ட உதவிகள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆனந்தன் என்ற மாற்றுத்திறனாளிக்கு நவீன செயற்கைக் கால்கள், ரூ. 3 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் உபகரணம் வழங்கப்பட்டது. மேலும் வேளாண்துறை, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண் தோட்டக்கலை துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஆதிதிராவிட நலத்துறை உள்ளிட்டவை சார்பில் பயனாளிகளுக்கு ரூ. 65 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்டனர். பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சிகளுக்காக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. முன்னதாக சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பக்தவச்சலம், வரவேற்றார். ஊத்துக்குளி தாசில்தார் கா. முருகேஸ்வரன், வருவாய்த்துறை அதிகாரிகள், ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி