திருச்சி: ஜூன் 14 இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவர் எம். கிறிஸ்டோபர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் மணப்பாறை, லால்குடி, துறையூர், முசிறி, ஸ்ரீரங்கம் மற்றும் தொட்டியம் நீதிமன்ற வளாகங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் ஏற்கெனவே நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில், சமரசம் செய்யக்கூடிய கடனோரை மோசடி, தொழிலாளர் நல வழக்குகள், குற்றவியல், கல்விக்கடன், மோட்டார் வாகன விபத்து, விவாகரத்து தவிர்த்து மற்ற குடும்பப் பிரச்னைகள் தொடர்பான வழக்குகள் மற்றும் உரிமையியல் வழக்குகள் போன்றவற்றில் பேசி சமரசமாக முடிக்கப்படும்.

மக்கள் நீதிமன்றம் முன் முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. மேலும், மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்துக் கொள்ளப்படும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்றக் கட்டணம் முழுமையாகத் திருப்பித் தரப்படும்.இத்தகைய வழக்குகளுக்கு தீர்வு காண ஏற்படுத்தப்பட்டுள்ள அமர்வு திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரை இயங்கும். கூடுதல் விவரங்களுக்கு, 0431-2460125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தொடர்புடைய செய்தி