டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நூதன போராட்டம்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அண்ணா வளைவு பகுதியில் செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அருகாமையில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம், டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டுமென சமீபத்தில் போராட்டம் நடத்தியது.

போராட்டத்தின் எதிரொலியாக, டாஸ்மாக் மதுபான கடையின் அதிகாரிகள், மாணவர்களை அழைத்து திருவெறும்பூர் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் ஒரு சில நாட்களில் மதுபான கடையை வேறொரு இடத்திற்கு மாற்றி விடுவோம் என உறுதி அளித்தனர். ஆனால், அந்த டாஸ்மாக் கடை வேறு இடத்துக்கு மாற்றப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இதனை கண்டித்தும், கல்லூரி அருகே செயல்படும் டாஸ்மாக் மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்ற கோரியும் நேற்று (அக் 3) மாணவர்கள் திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு மாணவர் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து நூதன முறையில் இறந்தவர் போல கழுத்தில் மாலை அணிந்து கொண்டு சாலையில் படுத்தும், அவருக்கு சக மாணவர்கள் இறுதிச் சடங்குகள் நடப்பது போலவும் சித்தரித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்..

அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். மாணவர்களின் மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி