மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரிப்பதை கைவிட வேண்டும் என்று உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து 'மதச்சார்பின்மை காப்போம்' என்ற தலைப்பில் திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பேரணி நடைபெற்றது. திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், "யார் எந்த கூட்டணி என்று தேர்தல் கணக்குகளை பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், நமக்கு அந்த கவலை இல்லை. விசிக திமுகவிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது என்று சொல்கிறார்கள். அடு அற்பர்களே, அரசியல் அறியாமையில் உளறும் அரைவேற்காடுகளே, தமிழ்நாட்டு அரசியலை திசை வழியை தீர்மானிப்பவர்கள் விசிக தான். இந்திய அரசியலையும் கூர்மைப்படுத்துபவர்களும் விசிக தான். மதச்சார்பின்மைக்கு ஆதரவானவர்கள் எதிரானவர்கள் என்று கூர்மைப்படுத்துகிற அரசியலை விசிக மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறது" என பேசினார்.