திருச்சி: நண்பர் உயிரிழந்த சோகத்தில் முதியவர் பலி

திருச்சி ராம்ஜி நகர் அருகேயுள்ள கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 60). ராம்ஜி நகரைச் சேர்ந்தவர் டாக்கர் (வயது 62). இருவரும் சுமார் 30 ஆண்டுகால நண்பர்கள். எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்து செல்வது வழக்கம். இருவருக்கும் குழந்தைகள் மற்றும் பேரன், பேத்திகள் உள்ளனர். 

இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி பகல் 1 மணியளவில் செல்வம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார். அப்பகுதியில் கோயில் திருவிழா நடைபெற்று வருவதால், அன்றே உடலை அடக்கம் செய்ய கிராமத்தினர் முடிவு செய்தனர். எனவே அடுத்த சில மணிநேரங்களில் இறுதிச்சடங்குகள் முடிந்து அன்றிரவே சுமார் 7 மணியளவில் அவரது உடலை மயானத்துக்கு எடுத்துச்சென்றனர். இந்த தகவல் டாக்கருக்கு தாமதமாக தெரியவந்துள்ளது. 

உடனே நண்பர் வீட்டுக்குச் சென்றபோது, உடலை மயானத்துக்கு எடுத்துச்சென்றுவிட்ட விவரம் தெரியவந்துள்ளது. நண்பரின் முகத்தைக்கூட பார்க்க முடியாமல் போய்விட்டதே எனக்கூறி அவரது படத்துக்கு முன்பு அமர்ந்து டாக்கர் அழுது புலம்பியுள்ளார். அவரை குடும்பத்தினர் ஆறுதல்படுத்தியுள்ளனர். 

அப்போது திடீரென அவரும் மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் டாக்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி