திருவெறும்பூர் அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் மகன் சுந்தர் என்கிற காக்கா என்கிற சுந்தர்ராஜ் (வயது 32). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர்மீது திருவெறும்பூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம்(செப்.12) இரவு தனது வீட்டு மாடியில் உறங்கிக் கொண்டிருந்த சுந்தர்ராஜ் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்தில் திருவெறும்பூர் டிஎஸ்பி, ஜாஃபர் சித்திக், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

மோப்பநாய் லீலி சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட சுந்தர்ராஜ் அதே பகுதியைச் சேர்ந்த மதி, வடிவேல் ஆகியோருடன் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்த நிலையில் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தில் எஸ். பி. வருண் குமார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது மற்றொரு பகுதியில் சுந்தர்ராஜ் ஓட்டி வந்த மகேந்திரா வேனை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி