திருச்சி மாவட்டம் முசிறி அருகே அமைந்துள்ள கரிகாலி ஏரி தா. பேட்டை ஒன்றியத்தின் பிரதான பாசன ஏரியாகும். இந்த ஏரியிலிருந்து நிரம்பி வழியும் தண்ணீர் கொழிஞ்சிபட்டி, ஊருடையாபட்டி, வடமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளை வந்தடைவதோடு வழித்தடங்களில் உள்ள பாசன நிலங்களுக்கு மிகுந்த பயனுடையதாகும். தொடர் மழை காரணமாக கொல்லிமலையில் பெய்த மழை புளியஞ்சோலை வழியாக பல்வேறு வழித்தடங்களில் உள்ள ஏரிகளைக் கடந்து கரிகாலி ஏரியை வந்தடைந்தது. ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில் வழிந்து ஓடும் தண்ணீரை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாசன வாய்க்கால்கள், நீர் வரத்துக்கு சரியாக உள்ளதா என்பதையும் தண்ணீர் விரயமாகாமல் அடுத்த ஏரிக்கு செல்லும் வகையில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.