திருச்சி பாலக்கரை மணல்வாரித்துறை ரோடு பகுதியில் உள்ள கூரியர் சர்வீஸில் போதை மாத்திரை பார்சல் வந்துள்ளதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது போதை மாத்திரை பார்சலை வாங்குவதற்கு இரண்டு பேர் வந்தனர். பார்சலை வாங்கிவிட்டு வந்த அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். போலீசார் அந்த பார்சலை பிரித்துப் பார்த்தபோது அதில் 2000 போதை மாத்திரைகள் இருப்பதே தெரியவந்தது. இதையடுத்து முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்த அல்லாஹ் பிச்சை, பாலக்கரை எடத்தெருவைச் சேர்ந்த அஜீத் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.